அதானி எக்ஸ் தளம்
இந்தியா

சரிந்த வேகத்தில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த அதானிகுழும பங்குகள்! நிலவரம் என்ன?

ஹிண்டன்பர்க் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்று சரிவைச் சந்தித்துள்ளன.

Prakash J

உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதுடன், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

“இந்த நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய விஷயம் வரப்போவதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த பதிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது.

அதில், ’அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் (Madhabi Puri buch) தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்த’தாக தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தங்கள் எக்ஸ் வலைத்தள கணக்கை செபி லாக் செய்து வைத்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்திருந்தது.

செபியின் தலைவர் மாதபி புரி புச்சும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக.12) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் தொடங்கியுள்ளது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.

சுமார் 7 சதவீதம் வரை அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சரிந்த வேகத்தில் மீண்டும் அதானி குழும பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

அதனால், மதியத்திற்கு மேல் தான் உண்மையான நிலவரம் தெரியவரும்.

”ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும்” என சந்தை நிபுணர் அம்பரீஷ் பாலிகா தெரிவித்துள்ளார்.

”இந்த வீழ்ச்சி எதுவரை செல்கிறது என முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். அதாவது, புதிய வீழ்ச்சிக்கு சந்தை செல்கிறதா எனப்தை கூடுதல் கவனத்துடன் கவனிக்க வேண்டும். வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அதனுடைய தாக்கம் கட்டாயம் சந்தையில் இருக்கும். ஆனால் அடுத்த சில நாட்களில் இதன் வீரியம் குறையும்” என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: ஒரேநாளில் 15 கின்னஸ் சாதனைகள்.. அமெரிக்க ’சீரியல் ரெக்கார்டு பிரேக்கர்’ அசத்தல்!