இந்தியா

4.07 கோடி பெண்களுக்கு தலா ரூ.500: வங்கிக் கணக்கில் சேர்த்தது மத்திய அரசு !

4.07 கோடி பெண்களுக்கு தலா ரூ.500: வங்கிக் கணக்கில் சேர்த்தது மத்திய அரசு !

jagadeesh

கொரோனா நிவாரண நிதியாக 4 கோடியே 7 லட்சம் பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் தலா 500 ரூபாயை மத்திய அரசு சேர்ப்பித்துள்ளது.

இத்தகவலை மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக இத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாத இறுதியில் 20 கோடியே 39 லட்சம் ஜன் தன் கணக்குகளுக்கும் பணம் சேர்ப்பிக்கப்படும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கிற்கு வரும் இத்தொகையை எடுக்க குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் வங்கிகளில் கூட்டம் குவிவதை தடுக்கவே நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி பணம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பிரச்னையால் மாநில அரசுகளின் நிதிநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு 17 ஆயிரத்து 287 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இத்தொகையில் 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மாநில பேரிடர் சமாளிப்பு நிதியில் முதல் தவணையாக தரப்பட்டுள்ளது. இது தவிர 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தபடி வருவாய் பற்றாக்குறை மானிய வகையில் 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.