இந்தியா

ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பணம் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி!

ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பணம் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி!

ச. முத்துகிருஷ்ணன்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பணத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பிரபல மொபைல் நிறுவனமான “ஸியோமி” நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் விதிகளின் கீழ் ஸியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.5551.27 கோடியை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.

இந்த ஆண்டு பிப்ரவரியில், Xiaomi சொந்தமான துணை நிறுவனமான M/s Xiaomi டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் செய்ததாகக் கூறப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது. 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய ஸியோமி நிறுவனம் 2015 ஆம் ஆண்டிலிருந்து பணத்தை அனுப்பத் தொடங்கியது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5,551.27 கோடிக்கு சமமான வெளிநாட்டு பணத்தை மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஸியோமி அனுப்பியுள்ளதாகவும் Xiaomi குழுமம் ராயல்டி என்ற பிரிவில் இப்பணத்தை அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியது.

“ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகை அவர்களின் சீன நிறுவனங்களின் அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டன. மற்ற இரண்டு நிறுவனங்கள், அதாவது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட தொகையும், Xiaomi குழும நிறுவனங்களின் நன்மைக்காகவே அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் கிடைத்த வருவாயை ராயல்டி என்ற பெயரில் வெளிநாட்டிற்கு அனுப்பியது முறைகேடானது” என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.