இந்தியா

சுமித்ரா மகாஜனுக்காக ரூ48 லட்சத்தில் வாங்கப்பட்ட சொகுசு கார் - 3 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை 

சுமித்ரா மகாஜனுக்காக ரூ48 லட்சத்தில் வாங்கப்பட்ட சொகுசு கார் - 3 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை 

webteam

முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்காக வாங்கிய ஜாக்குவார் கார் தற்போது பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 

மக்களவையின் சபாநாயகராக சுமித்ரா மகாஜன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அந்தசமயத்தில் இவர் 2016ஆம் ஆண்டு தனது பயன்பாட்டிற்கு புதிதாக ஜாக்குவார் காரை வாங்கியுள்ளார். அதன்படி மக்களவை செயலகம் சார்பில் புதிய ஜாக்குவார் எக்ஸ்இ என்ற 48.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வாங்கப்பட்டது. இந்தக் கார் சபாநாயகரின் பாதுகாப்பு காரணங்களுக்காக வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தக் கார் கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாக ‘தி பிரிண்ட்’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி சுமித்ரா மகாஜனுக்கு வாங்கிய கார் 2016ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமித்ரா மகாஜன் சில நாட்கள் பயன்படுத்தி விட்டு, அதன்பின்னர் டோயோட்டோ காம்ரி காரை பயன்படுத்த ஆரம்பித்தாக தகவல் தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக ‘தி பிரிண்ட்’  சுமித்ரா மகாஜனிடம் கேட்டப்போது, “எனக்கு கார்கள் குறித்த போதிய புரிதல் கிடையாது. என்னுடைய நோக்கம் எல்லாம் நான் பின்னால் எளிதாக அமர்வதற்கு ஏற்ற காராக இருக்கவேண்டும் என்பது தான். இதற்காக நான் இரண்டு ஜாக்குவார் மாடல் கார்களை பார்த்தேன். ஆனால் இறுதியில் மக்களவை செயலகம் வாங்கிய ஜாக்குவார் கார் நான் தேர்வு செய்தது அல்ல. இதனால் அந்தக் காரில் நான் சுலபமாக அமர்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தான் நான் அந்தக் காரை பயன்படுத்துவதை நிறுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மக்களவை சபாநாயகர்கள் பயன்படுத்தும் கார்களின் விலை அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் மக்களவை சபாநாயகர்களுக்காக 5 கார்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை அம்பாசிடர்(3.91 லட்ச ரூபாய்), ஹோண்டா அக்கார்டு(14.7 லட்ச ரூபாய்), டோயோட்டா காம்ரி(21 லட்ச ரூபாய்), ஜாக்குவார்(48.25 லட்ச ரூபாய்), டோயோட்டா காம்ரி ஹைபிரிட்(36.74 லட்ச ரூபாய்) ஆகிய கார்கள் ஆகும்.