மும்பையில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் ஒருநாளில் மட்டுமே 45 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க மும்பை மாநகராட்சி அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்தியுள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் மாஸ்க் அணியாமல் சென்ற சுமார் 23 ஆயிரம் பேரிடம் தலா 200 ரூபாய் வீதம் 45 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரத்தில் மட்டும் மும்பை மாநகராட்சி 60 லட்சம் ரூபாயை வசூலித்திருந்தது. இந்த வாரம் அபராத வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொடங்கியது முதல் இதுவரை மும்பை மாநகராட்சி மட்டுமே சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் 30 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் மாஸ்க் இன்றி பயணிப்போரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளது.