டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால், அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்று ஒரு புறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில், புகை மூட்டம் மற்றும் மாசு காரணமாகவும் சுற்றுச்சூழல் மோசமடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால், உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனாவை தடுக்கும் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கட்சித் தொண்டர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கவும் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.