கொரோனா பாதிப்புகளை சரிசெய்ய உருவாக்கப்பட்ட பி.எம் கேருக்கு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ 157 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய மத்திய அரசு துறையான ரயில்வேயின் கீழ் உள்ள 50 துறை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூபாய் 157.23 கோடி பிரதமரின் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ரூ 146.72 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது ரயில்வே. இது தொடர்பான தகவல் அறியும் உரிமை பதிலில், இந்த தொகை “ஊழியர்களின் பங்களிப்பு மூலம் பி.எம் கேர்ஸ் நிதிக்கு பங்களிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை பதில்களின் அடிப்படையில் இந்திய விண்வெளித்துறை பி.எம்.கேருக்கு 5.18 கோடி வழங்கியுள்ளது. இருப்பினும், பிரதம அமைச்சர் அலுவலகம் , உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பல முக்கிய துறைகள் மற்றும் தபால் துறை போன்ற பெரிய துறைகள் இந்த தகவல் அறியும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) நிதியில் இருந்து 38 பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் ரூ 2,105 கோடி , ஏழு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ 204.75 கோடி, பல மத்திய கல்வி நிறுவனங்கள் மூலம் ரூ. 21.81 கோடி பெறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் (சிவில்) கீழ் உள்ள பாதுகாப்புத் துறை மூலம் ரூ 26.20 லட்சம் , சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஊழியர்கள் ரூ 15.51 லட்சம், பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ 16.91 லட்சம், குடியரசுத் தலைவர் செயலகத்தின் ஊழியர்கள் ரூ 12.05 லட்சம். மக்களவை செயலகம் ரூ 52.54 லட்சம் மற்றும் மாநிலங்களவை செயலகம் ரூ. 36.39 லட்சம் இந்த பி.எம்.கேர் நிதிக்கு பங்களித்தனர்.
ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை பதில்களின் அடிப்படையில் மத்திய அரசு துறைகளின் இந்த தரவு அமைந்துள்ளது. மத்திய அரசின் 59 அமைச்சகங்களின் கீழ் 89 துறைகள் உள்ளன . அவற்றில் 43 அமைச்சகங்களின் கீழ் உள்ள 50 துறைகள் தகவல் அறியும் கேள்விகளுக்கு பதிலளித்தன.