இந்தியா

கார் ஸ்டெப்னி டயருக்குள் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்!

கார் ஸ்டெப்னி டயருக்குள் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்!

webteam

கர்நாடக மாநிலத்தில் கார் டயரில் பதுக்கி வைத்திருந்த இரண்டு கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 23ம்
தேதி நடைபெறவுள்ளது. கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்கள் மூன்றாம் கட்ட தேர்தலையே சந்திக்கின்றன. இதனையடுத்து அந்தந்த மாநிலங்களில்
தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிவமோகாவுக்கு செல்லும் சாலையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வைக்கப்பட்டிருந்த ஸ்டெப்னி டயரில் ஆராய்ந்த போது அதிகாரிகளுக்கு
அதிர்ச்சி காத்திருந்தது. டயரில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்தன. 

டயரில் இருந்த பணத்தின் மொத்த மதிப்பு 2 கோடியே 30 லட்சம் என தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடாவுக்காக பணம் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.