மும்பையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை ரயில்வே போலீசார் தக்க சமயத்தில் காப்பாற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.
மும்பையின் வடாலா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். ஆனால் படிக்கட்டில் வழுக்கி மீண்டும் பிளாட்பாரத்திலேயே விழுந்துள்ளார். வேகமெடுத்து சென்ற ரயிலுக்கு மிக அருகில் அவர் விழுந்தார். துரிதமாகச் செயப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் காவலர் பயணியை இழுத்து அவர் உயிரை காப்பாற்றினார். பயணியை காப்பாற்றிய அந்த ரயில்வே காவலர் “நேத்ரபால் சிங்” என்று தெரிய வந்துள்ளது.
மத்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவலர் பயணியைக் காப்பாற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என்று அந்த பதிவில் மத்திய ரயில்வே வலியுறுத்தியுள்ளது. பயணி பிளாட்பாரத்தில் விழுந்தவுடன், ரயில்வே காவலர் துரிதமாக பயணியை இழுத்து காப்பாற்றும் 14 வினாடிகள் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியுள்ளது.