கர்நாடக அமைச்சர் ஒருவர் தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கும் பொறுப்பை வகிக்கும் அணியின் ஒரு பகுதியாக இருக்கிறார் அமைச்சர் டாக்டர் கே.சுதாகர். ஆனால் இந்தக் கடுமையான காலகட்டத்தில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அவர் “பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் சுதாகர் தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் மிக மகிழ்ச்சியாக உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து "முழு உலகமும் ஒரு சுகாதார நெருக்கடியைச் சந்திக்கும் போது, கொரோனா பொறுப்பு அமைச்சர் டாக்டர் சுதாகர் நீச்சல் குளத்தில் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். இது தார்மீக மற்றும் நெறிமுறைக்கு மாறானது. அவர் தனது சொந்த விருப்பப்படி ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் முதலமைச்சர் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்"என்று சிவகுமார் அவரது ட்விட்டில் பதிவு செய்துள்ளார்.
அமைச்சர் சுதாகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நம்பிக்கையுடன் நீண்ட காலத்திற்குப் பிறகு என் குழந்தைகளுடன் நீச்சல் அடித்தேன். சமூக இடைவெளியைப் பராமரித்தேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.