இந்தியா

ரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்!

ரோஷினி நாடார் முதலிடம்: இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல்!

EllusamyKarthik

இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியல் ஒன்றில், ரோஷினி நாடார் முதலிடம் வகித்துள்ளார். இதில், பல்வேறு சாதனை பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொடாக் வெல்த் ஹுருன் (Kotak Wealth Hurun) என்ற நிறுவனம் 2020-க்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு இருந்தப் பட்டியலில், இந்த முறை ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் முதல் பணக்காரப் பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார். பயோகானின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார்-ஷா, யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர் லீனா காந்தி திவாரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

'கோடக் வெல்த் ஹுருன் லீடிங் வுமென் 2020' என்ற தலைப்பில் வெளியான இந்தப் பட்டியலில் 69 பேர் பரம்பரை செல்வந்தர்களும், 31 பெண்கள் சுய முன்னேற்றத்தால் முன்னேறியவர்களும் உள்ளனர். மேலும், பட்டியலில் உள்ள 19 சதவீத பெண்கள் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும், 30 சதவீதம் பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், கனிகா டெக்ரிவால் (ஜெட் செட்கோ), அஞ்சனா ரெட்டி (யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பிஸ்), விதி சங்க்வி (சன் பார்மாசூட்டிகல்ஸ்) ஆகியோர் இந்தப் பட்டியலில் இளம்வயது பெண்களாக இடம்பெற்றுள்ளனர்.

இதில், ஜோஹோவின் ராதா வெம்பு (5-வது), ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் ரேணு முஞ்சல் 7-வது இடத்திலும், நைகாவின் ஃபால்குனி நாயர் 10-வது இடத்திலும் உள்ளனர். திவ்யா கோகுல்நாத் (BYJU-ன் இணை நிறுவனர்) உட்பட ஆறு பெண்கள் ஸ்டார்ட் அப் மூலம் இந்த இடத்தை அடைந்துள்ளனர். இந்த பட்டியலைப் பொறுத்தவரை, பெண்கள் 3 துறைகளில் அதிக அளவில் தங்கள் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அவை மருந்துகள், ஜவுளி, ஆடை, ஆபரணங்கள் மற்றும் ஹெல்த் கேர் துறைகள் ஆகும்.

"தொழில்துறைகளில் பெண்கள் வெற்றியாளர்களாக, திகழ்ந்து வருகின்றனர். இதனை பார்க்கும்போது எழுச்சி ஏற்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பதை இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. பெண்களின் தேவை இன்றியமையாத வகையில் வளர்ந்து வருகிறது" என வெல்த் மேனேஜ்மென்ட் கோட்டக் மஹிந்திரா வங்கி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஓஷார்யா தாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஹுருன் இந்தியாவின் எம்.டி மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத், "உலக அளவில் 48 சதவீதம் பெண்கள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் பங்களிப்பு செலுத்துகின்றனர். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இந்த சதவீதம் 24 மட்டுமே. இதிலிருந்து தெரிவது, பாலின சமத்துவம் அடைந்தால் மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியான 5 டிரில்லியன் டாலரை இந்தியா அடைய முடியும்" எனக் கூறியுள்ளார்.