இந்தியா

30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

webteam

மகாராஷ்டிரா, புனேவில் 30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் யவாத் பகுதியில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை பணத்துடன் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளனர். முதலில் அவர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற ஸ்பிரே அடித்து மறைத்தனர். இதையடுத்து ஏடிஎம் இயந்திரத்தில் கயிறை கட்டி காரை இயங்க வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை அடியோடு பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.” எனத் தெரிவித்தனர். 

வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போது கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் 30 லட்சம் வரை பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஏடிஎம் சாதனம் தொடர்பாக வங்கிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை அனுப்பியது. அதன்படி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஏடிஎம் இயந்திரங்களை சுவரிலோ அல்லது தூணிலோ பதிந்த நிலையில் வைக்கும் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. எனினும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அதிக பாதுகாப்பு உள்ள இடங்களில் இது போன்ற மாற்றம் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.