அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் பெயர் வைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் மௌரியா அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் (வயது 89) கடந்த 21ஆம் தேதி காலமானார். இவர் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். கல்யான் சிங் மறைவையொட்டி பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், ஜே.பி. நட்டா பாஜக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலுக்குச் செல்லும் சாலைக்கு கல்யாண் சிங்கின் பெயர் வைக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், லக்னோ, பிரயக்ராஜ், புலந்த்சஹர், அலிகார் ஆகிய பகுதிகளிலும் தலா ஒரு சாலைக்கு கல்யாண் சிங்கின் பெயர் சூட்டப்படும் எனவும் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கூறியுள்ளார்.
மறைந்த கல்யாண் சிங் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. டிசம்பர் 6, 1992ல் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.