லக்னோ சாலை பள்ளம் முகநூல்
இந்தியா

லக்னோ | தீடீரென சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

லக்னோவில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் சிக்கிய வாகனத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடர் கனமழை காரணமாக, விகாஸ் நகர் சாலையில் தீடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார் ஒன்று அப்பள்ளத்தில் சிக்கியுள்ளது. உடனடியாக காரில் இருந்த நபர்கள் பத்திரமாக மீட்டப்பட்டுள்ளனர். இந்த பள்ளத்தின் அளவு சுமார் 20 - 30 அடி அகலமும், 20 அடி ஆழமும் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடைப்பெற்றதற்கு பிறகு அவ்விடத்திற்கு விரைந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில், ஜல்நிகாமின் என்ற நிர்வாகத்தின் சாக்கடை கால்வாயில் இருந்து தொடர்ந்து கழிவுநீர் கசிந்து, சாலையின் அடிப்பகுதியில் உள்ள மண் படிப்படியாக சரிவை கண்டுள்ளது என்பதும் இதனால்தான் பள்ளம் ஏற்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேச பொதுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “3.3.2024 அன்று மதியம் பெய்த கனமழை காரணமாக 7 மீட்டர் நீளம், சுமார் 5 மீட்டர் அகலம், 5 மீட்டர் ஆழம் கொண்ட சாலை திடீரென பள்ளமானது ஏற்பட்டுள்ளது. ஜல்நிகாமின் நிர்வாகத்தின் கழிவுநீர் காரணமாக ஏற்பட்ட இக்கசிவை சிரமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக அமைப்பான சூயஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.

இவர்கள் இந்த சீரமைப்பு பணியை முடித்தவுடன் பொதுப்பணித்துறை சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ராட்சத பள்ளம் குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.