இந்தியா

இந்தியாவில் 73% செல்வம் 1% பேரிடம் குவிந்துள்ளது: அதிர்ச்சித் தகவல்

webteam

இந்தியாவின் கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் 73 சதவிகித செல்வம் , 1% பேரிடம் குவிந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

2017ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஹாக்ஸ்ஃபாம் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் கடந்த ஆண்டு அடைந்த பொருளாதார வளர்ச்சியில் 73% செல்வம், 1% சதவித பணக்காரர்களிடம் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 67 கோடி ஏழை மக்களின் வருமானம் 1% மட்டுமே முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலை உலகளவிலும் பொருந்தும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. உலகில் 82% பொருளாதார வளர்ச்சி 1% மக்களிடம் உள்ளதாகவும், 3.7 பில்லியன் ஏழை மக்களின் கணக்குகளில் வருமான முன்னேற்றமே இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆய்வு குறித்து உலக பொருளாதார மாநாட்டில், சர்வதேச தலைவர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் ஹாக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1% பணக்காரர்களின் பொருளாதாரம் 20.9 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாகவும், இது நடப்பு ஆண்டின் மத்திய பட்ஜெட்டுக்கு இணையான தொகை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 10% மக்கள் 73% சதவிகித சொத்துக்களை வைத்துள்ளதாகவும், 37 சதவிகித பணக்காரர்கள் வசதியாக வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒரு பிரபல ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகியின் ஒரு வருட வருமானத்தை, ஒரு கிராமப்புறத்தில் பணிபுரியும் சாமானிய ஊழியர் பெறுவதற்கு 941 வருடங்கள் தேவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேபோன்று ஆடை நிறுவனத்தில் சிறந்த ஊதியம் பெறும் நிர்வாகியின் 17.5 நாள் வருமானத்தை பெற, கிராமப்புற ஊழியர் 50 வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.