தனிமனித விவரங்கள் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, சர்வாதிகார, இனவாத சக்திகளுக்கு கிடைத்த அடி என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. அந்த அட்டைக்காக கைரேகை, கருவிழியை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளின்போது தனிமனித தகவல் பாதுகாப்பு, அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்தது. இந்த வழக்கில் தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமைதான் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
டிவிட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, கண்காணிப்பு மூலம் பலரை ஒடுக்க நினைக்கும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக கிடைத்துள்ள வெற்றி இது என்று கூறியுள்ளார். தனிமனித விவரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தவறாக சித்தரித்து கொண்டாடுவதாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். காலம் காலமாக தனிமனித ரகசியத்தன்மையை காக்கும் சட்டம் இயற்றாதவர்கள்தான் இன்றைய நிலைக்கு காரணம் என்று அவர் விமர்சித்துள்ளார்.