இந்தியா

ரீவைண்ட் 2020: திவ்யா கோல்நாத் முதல் இசைவாணி வரை... - இந்திய சிங்கப் பெண்கள்!

ரீவைண்ட் 2020: திவ்யா கோல்நாத் முதல் இசைவாணி வரை... - இந்திய சிங்கப் பெண்கள்!

PTuser

இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். தான் தேர்ந்தெடுத்த துறையில், தங்களின் தனித்துவத்தை நிரூபிக்கின்றனர். பழமை வாய்ந்த ஆணாதிக்க கோட்பாடுகளை உடைப்பது மட்டுமல்லாமல், ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கோட்டைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு பில்லியன் டாலரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இணை நிறுவனர், இந்தியாவின் பணக்கார பெண்கள், சக்திவாய்ந்த பெண்கள், சுயமாக முன்னேறியவர்கள், பிபிசி மற்றும் ஃபோர்ப்ஸ் ஆகிய ஊடகங்களின் பட்டியலிலும் இடம்பெற்று இந்திய பெண்கள் சாதித்துக்காட்டியுள்ளார்கள். 2020-ல் சாதித்த சக்தி வாய்ந்த பெண்கள் குறித்து பார்ப்போம்.

1.திவ்யா கோல்நாத்:

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஆசியாவின் சக்திவாய்ந்த சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்கள் (Powerful Businesswomen 2020) பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் திவ்யா. இவர் பைஜூ Byju's-ன் இணை நிறுவனர். கல்வி, கற்றல் தொடர்பான இந்நிறுவனத்தின் மூலம் திவ்யாவும், அவரது கணவரான பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.

2. அமீரா ஷா:

மெட்ரோபோலிஸ் ஹெல்த் கேர் (Metropolis Health Care) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். ஃபோர்ப்ஸ் ஆசியாவின் 2020 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பெண் தொழிலபதிபர்கள் பட்டியலில் இந்தியப் பெண்களில் அவர் ஒருவராக உள்ளார், கொரோனா தொற்று தாக்கத்தின்போது, அவரது பிசினஸ் கணிசமான அளவில் வளர்ச்சியை சந்தித்தது.

3.கே.கே.ஷைலஜா:

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.ஷைலஜா. ஆசிரியராகவும் அறியப்படுபவர். இங்கிலாந்தை தளமாக கொண்ட பிராஸ்பெக்ட் இதழ் வெளியிட்ட கொரோனா காலத்தில் உலகின் தலைசிறந்த 50 சிந்தனையாளர்கள் பட்டியலில் தேர்வானவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், அதை எதிர்த்து போராடிய ஷைலஜாவின் வெற்றி பயணம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் சில பெரிய ஊடக நிறுவனங்களில், ஷைலஜாவும், அவரது வெற்றிப்பயணமும் இடம்பெற்றுள்ளது.

4.ராணா அய்யூப்

2020 ஆம் ஆண்டில் தைரியமான பத்திரிகையாளர் என்பதற்காக மெக்கில் விருதைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் அவர் இடம்பிடித்துள்ளார். `குஜராத் கோப்புகள்' என்ற புத்தக்கத்தின் வாயிலாக குஜராத் கலவரத்தை உலகறியச் செய்த முக்கியமான பத்திரிகையாளர் ராணா அய்யூப்.

5.ரோஷினி நாடார் மல்ஹோத்ரா:

36,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதேபோல, ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, உலகின் மிக சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் அவர் 54 வது இடத்தில் உள்ளார்.

6.வினதி சரஃப் முத்ரேஜா: 

வினாட்டி ஆர்கானிக்ஸ் லிமிடெட் (Vinati Organics Limited (VOL) சிறப்பு ரசாயன நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். வினதி தனது தந்தையுடன் தொழிலில் இணைந்து நிர்வாக இயக்குநராக சேர்ந்ததிலிருந்து, லாபம் ரூ.66 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாக உயர்ந்துள்ளது.

7.இசைவாணி:

பிபிசியின் சார்பில் உலகம் முழுவதும் உள்ள 100 உத்வேகம் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இசைவாணி. 'தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்' (casteless collective) இசைக்குழுவில் உள்ள ஒரே பெண். சென்னையைச் சேர்ந்தவர், கானா பாடல்களில் தனி முத்திரை பதித்தவர். ஆண்களால் மட்டுமே கானா பாடல்கள் பாடமுடியும் என்ற ஸ்டிரியோடைப்பை உடைத்து தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர்.

8.பில்கிஸ் பானு:

ஷாஹீன் பாகின் 'தாதி' என்று அழைக்கப்படும் 82 வயது பில்கிஸ், டைம் இதழின் 2020-ன் மிகவும் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் உள்ளார். ஷாஹீன் பாக்-கில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக இரண்டு மாத கால உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டபோது கவனத்தை ஈர்த்தவர். மேலும் அசைக்க முடியாத உறுதியுடனும் போராட்டங்களுக்கு துணை நின்றவர் பில்கிஸ் பானு.

9.அங்கிட்டி போஸ்:

 பேஷன் சில்லறை விற்பனையாளர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் வர்த்தக தளமான ஜிலிங்கோவின் (Zilingo) தலைமை நிர்வாக அதிகாரி அங்கிட்டி போஸ். 1 பில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட தொடக்க நிறுவனத்தின் முதல் பெண் இணை நிறுவனராக இருந்தவர் அங்கிட்டி. மேலும் ஃபோர்ப்ஸின் Self Made Women 2020 என்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

10.மனாசி ஜோஷி:

 கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றவர் மனாசி. சமீபத்தில், தி டைம் இதழில் மனாசி ஜோஷி 'அடுத்த தலைமுறை தலைவர்' என்று பெருமைபடுத்தியது. ஃபோர்ப்ஸ் இந்தியாவின் Self Made Women 2020 பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.

11.பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்:

பார்ச்சூன் 'இந்தியாவின் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலில் 2020 இல் இடம்பெற்றார். சர்வதேச திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

12.லெப்டினன்ட் ஜெனரல் மாதுரி கனிட்கர்:

மாதுரி, இந்திய வரலாற்றில் மூன்றாவது பெண் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் இந்திய ராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியை அடைந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

13.பாலா தேவி:

வெளிநாட்டு கிளப்புடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய பெண் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றவர். அதுவும் புகழ்பெற்ற ரேஞ்சர்ஸ் எஃப்.சி கிளப்புடன் ஒப்பந்தமாகியுள்ளார். வலிமையான பெண்பாலா தேவி, மணிப்பூர் காவல் துறையிலும் பணியாற்றுகிறார்.

14.சீமா குஷ்வாஹா:

 'இந்தியாவின் மகள்' எனப்படும் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிர்பயாவின் வழக்கறிஞராக இருந்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக, நிர்பயாவின் பெற்றோருடன் சேர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர, கடுமையாக போராடியவர். நிர்பயா மறுக்கப்பட்ட நீதியை கொண்டு வர போராடி அதில் வெற்றிகண்டவர் சீமா. இவரின் வாதத்தால் நிர்பயா குற்றவாளிகள் மார்ச் மாதம் தண்டனை பெற்றனர்.

- மலையரசு