செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக சட்டசபையில் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது நடந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரேவண்ணா, “பவானி வழக்கில் அக்கறை காண்பித்து, அவர்கள் மீது சிறப்பு புலனாய்வுக் குழு நடவடிக்கை எடுத்தது. எஸ்.ஐ.டி., அதிகாரிகள் மிகவும் பலமாக செயல்பட்டனர். புகார் அளித்த இரண்டே நாட்களில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப்ரீதம் கவுடா வழக்கிலும் அப்படிதான் நடந்தது.
ஆனால், வால்மீகி முறைகேடு விஷயத்தில் விசாரணை நடத்த இன்னும் சம்மன் கூட வழங்கவில்லை. சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வெறும் எட்டு மணி நேரம் அமர வைத்தனர். வால்மீகி ராமாயணம் படிப்பதற்கு அமர வைத்தனரா?” என்று கேள்வியெழுப்பினார்.
அப்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரிஷ்வான் அர்ஷத், நாராயணசாமி, பிரியங்க் கார்கே உட்பட சிலர் எழுந்து நின்று, “உங்கள் மகன் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார்” என்றனர்.
அப்போது, ரேவண்ணா “என் மகன் தவறு செய்திருந்தால், அவனை தூக்கில் போடுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. என் மீது குற்றம் சாட்டுவது ஏன்? பெண்களை தன் அலுவலகத்துக்கு, அழைத்து வந்து, என் மீது டி.ஜி.பி புகார் அளிக்க வைத்தார். அவர் டி.ஜி.பி பொறுப்புக்கு தகுதியானவரா?” என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆளுங்கட்சியினர் பலர் எழுந்து நின்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் நாராயணசாமி, “போன பணத்தை மீண்டும் பெறலாம். நம் மாநிலத்தின் மானம் பறிபோனது. அந்த மானம் திரும்பி வருமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு ரேவண்ணா, “ஏய் உட்காரப்பா... நீ என்ன செய்தாய் என்று எனக்கும் தெரியும்” என்றார். அப்போது துணை முதல்வர் சிவகுமார், “உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், விவாதிப்பதற்கு நோட்டீஸ் கொடுத்தால், விவாதிக்கலாம்” என தெரிவித்தார்.