கர்நாடகா பள்ளிகளில் மூன்றாம் மொழியாக தமிழ்மொழிப் பாடத்தை கற்பிக்கும் உத்தரவை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என பெங்களூருவில் நடைபெற்ற தமிழர் - கன்னடர் ஒற்றுமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் முதல் முறையாக தமிழர் - கன்னடர் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தொடங்கி வைத்த இம்மாநாட்டில் மைசூரு, பெங்களூரு, கோலார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று, இரு மொழி மக்களின் ஒற்றுமை குறித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து இரு மொழிகளிலும் சிறந்து விளங்கும் கவிஞர்கள் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சியும், மொழிகளுக்கு சிறந்த தொண்டாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. அதேபோல், கலை, கலாசார, உணவுத் திருவிழா உள்ளிட்டவையும் இடம்பெற்றன. மாநாட்டில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெளிமாநிலங்களில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கவேண்டும், அயலகத்தமிழர் பண்பாட்டு மையத்தை பெங்களூரில் அமைத்து தர வேண்டும், அயலகத்தமிழர் நலத்துறையின் கிளையை பெங்களூரில் தொடங்கி, அதன் வழியே அயலகத்தமிழர் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.
இதே போல், பிறமொழியை சேர்ந்த அமைப்புகளுக்கு அளிக்கும் சலுகைகளை கர்நாடக தமிழர்களுக்கும் வழங்க வேண்டும், தமிழ்க் கல்வெட்டுகளை சிதைக்க முற்படும் சமூகவிரோதிகளின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் நிலவி வரும் பாரபட்சத்தை களைய வேண்டும், அரசு நடத்தி வரும் தமிழ்ப்பயிற்றுமொழி பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கர்நாடகா அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன. இத்துடன் கர்நாடகா பள்ளிகளில் மூன்றாம் மொழியாக தமிழ்மொழிப்பாடத்தை கற்பிக்கும் உத்தரவை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.