குஜராத் போராட்டம் எக்ஸ் தளம்
இந்தியா

அரசு ஒதுக்கிய வீடு.. முஸ்லிம் என்பதால் குடியேற அனுமதிக்காத குடியிருப்புவாசிகள்.. குஜராத்தில் அவலம்!

குஜராத் மாநிலம் வதோதராவில் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஒருவருக்கு வீடு வழங்கப்பட்டது. அவர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை அனுமதிக்க சக குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Prakash J

பரந்துவிரிந்த இந்தியாவில் பல்வேறு மத மக்களும், பல இன மக்களும் ஒன்றாய் வசித்து வருகின்றனர். ஆனாலும் யாரோ சிலர் செய்யும் பிரச்னைகளால் இதர மதங்களுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் மோதல் ஏற்பட்டு வன்முறை நடைபெறுகிறது.

இந்த நிலையில், குஜராத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டும், அந்த வீட்டுக்குள் குடியேற விடாமல் சக குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவின் ஹர்னி பகுதியில் முதலமைச்சர் ஆவாஸ் யோஜனா அரசின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் மொத்தம் 462 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. அவரும், தன் மகனுடன் அந்த வீட்டில் குடியேற ஆவலாய் இருந்தார். ஆனால், அங்குள்ள இதர குடியிருப்புவாசிகள், அவர் ஒரு முஸ்லிம் எனக் காரணம் காட்டி, அவரை அந்த வீட்டுக்குள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், அந்தப் பெண்.

இதையும் படிக்க: ”தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு பாஜகவின் ஆணவமே காரணம்” - ஆர்.எஸ்.எஸ். சாடல்

462 குடியிருப்பு வளாகத்தில் ஒதுக்கப்பட்ட ஒரே இஸ்லாம் பெண் அவர்தான் என்றும், இது தவறு என்றும், அவருக்கு குடியிருப்பு ஒதுக்கியதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 33 குடியிருப்புவாசிகள் அவருக்கு எதிராக மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர் எனப் பல இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் அவர்கள், ”இந்த ஹர்னி பகுதி, இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் அமைதியான பகுதியாகும். சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் இங்கு முஸ்லிம்கள் குடியேற்றம் எதுவும் இல்லை. ஆகையால், இங்கு அவருக்கு வீடு கொடுப்பது ஆபத்து. மேலும், இப்பகுதியில் முஸ்லிம்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும்” எனத் தெரிவித்திருப்பதுடன் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த இஸ்லாம் பெண், “2020/ஆம் ஆண்டுமுதலே எனக்கு இந்த வீட்டை ஒதுக்கக்கூடாது எனக் கோரி குடியிருப்பாளர்கள் குஜராத் முதல்வர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார்கள். அப்போதே போராட்டம் தொடங்கியது. எனினும் எங்கள் குடியிருப்பு அமைந்துள்ள ஹர்னி காவல் நிலையத்தில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி புகாரை முடித்து வைத்தனர்.

ஆனால் இதே பிரச்னையை எழுப்பி மீண்டும் கடந்த ஜூன் 10ஆம் தேதி போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த மதரீதியான பாகுபாடுகள் என் மகனையும் மனதளவில் வெகுவாக பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இனி, செல்போன் நம்பருக்கும் கட்டணம்.. அரசுக்கு டிராய் பரிந்துரை!

இதற்கிடையே, அந்த முஸ்லிம் பெண் தற்போது தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வதோதராவின் மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார். இதுகுறித்த செய்தி ஆங்கில ஊடகங்களில் வெளிவந்த பிறகு, குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பிரிஜேஷ் திரிவேதி, தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதிபதி பிரணவ் திரிவேதி ஆகியோர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரினர்.

ஆனால், குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், மனுதாரர் இதுகுறித்து மனுத் தாக்கல் செய்தால் நீதிமன்றம் விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சிக்கிம்| நேற்று எம்.எல்.ஏவாக பதவியேற்பு.. இன்று ராஜினாமா.. முதல்வர் மனைவி அதிரடி!