இந்தியா

''தேர்தலுக்கு முதல்நாளே விரலில் மை வைத்தார்கள்'' - பரபரப்பை ஏற்படுத்திய உ.பி. கிராம மக்கள்!

''தேர்தலுக்கு முதல்நாளே விரலில் மை வைத்தார்கள்'' - பரபரப்பை ஏற்படுத்திய உ.பி. கிராம மக்கள்!

webteam

உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்கத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.

மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வந்து வாக்களித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் இன்று வாக்களித்தார்.

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

பாஜகவை சேர்ந்த 3பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கும் ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்