இந்தியா

பலத்த மழையால் சாயும் நிலையில் குடியிருப்பு; மக்கள் வெளியேற்றம்

JustinDurai

குர்கானில் பெய்துவரும் அடைமழை காரணமாக, குடியிருப்பு ஒன்று சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால் அதில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குர்கான் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.  

குர்கானில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட 46 பகுதிகளை அடையாளம் கண்டு மீட்பு நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மக்கள் வசித்துவந்த குடியிருப்பு ஒன்று சூழ்ந்திருந்த மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்து, ஒரு பக்கமாக லேசாக சாய்ந்தது. இதனால் அங்கு வசித்துவந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். குடியிருப்புக் கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் இருப்பதால் அதில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாறினர்

தற்போது அந்த குடியிருப்பு காலியான நிலையில் உள்ளது. அக்கட்டிடத்தை சுற்றியுள்ள மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் அருகில் யாரும் நுழையாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அடுத்த 5 நாட்களுக்கு  மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை மேலும் மோசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது