இந்தியா

Paytm-க்கு ரிசரவ் வங்கி விதித்த தடை... எதற்கு?

Paytm-க்கு ரிசரவ் வங்கி விதித்த தடை... எதற்கு?

webteam

பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிய வாடிக்கையாளரை இணைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தர்விட்டிருக்கிறது. என்ன காரணம் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால் தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள சிக்கல் காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் கேஒய்சி, தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் குறைப்பாடு இருப்பதாக தெரிகிறது. இதனை களைவதற்காக ஐடி துறையில் ஆடிட் நிறுவனத்தை நியமனம் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. அந்த நிறுவனம் கொடுக்கும் அறிக்கையை வைத்துதான் புதிய வாடிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹெச்டிஎப்சி வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்டு  ஆகிய நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடங்கப்பட்டது. பேமெண்ட் வங்கிகள் செயல்படத்தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஸ்மால் பைனான்ஸ் வங்கி தொடங்க விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தொடங்க விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கியின் தடை காரணமாக ஸ்மால் பைனான்ஸ் வங்கி தொடங்குவது தள்ளிப்போகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. தவிர கடந்த அக்டோபர் மாதம் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது.



பைஜூஸ் சந்தை மதிப்பு 22 பில்லியன் டாலர்

எஜுடெக் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நிறுவனமாக பைஜூஸ் இருக்கிறது. சமீபத்தில் 80 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறது. தற்போதைய நிலையில் சந்தை மதிப்பு 2200 கோடி டாலராக இருக்கிறது. இந்த 80 கோடி டாலரில் 40 கோடி டாலரை பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரன் முதலீடு செய்திருக்கிறார். இதன் மூலம்  நிறுவனத்தில் இவரது பங்கு 22 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த அக்டோபர் 1800 கோடி டாலராக இருந்த சந்தை மதிப்பு தற்போது 2200 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. பைஜூஸ் மூலம் 15 கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். தற்போது நிறுவனத்தின் வருமானம் 150 கோடி டாலர்களாக இருக்கிறது. அடுத்த ஆண்டு முடிவில் 300 கோடி டாலர்களாக உயரும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம் திரட்டும் கடைசி நிதி திரட்டல் இதுவாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கடுத்து ஐபிஒ வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்திய மற்றும் அமெரிக்க சந்தையில் ஐபிஓ கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நிறுவனங்களை வாங்குவதிலும் பைஜூஸ் கவனம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு மட்டும் 9 நிறுவனங்களை பைஜூஸ் வாங்கி இருக்கிறது. 2018-ம் ஆண்டு யுனிகார்ன்( ஒரு பில்லியன் டாலர்)  நிலையை அடைந்த பைஜூஸ் தற்போது 22 பில்லியன் டாலர் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.