இந்தியா

ஆரியர் படையெடுப்பு உண்மையா? - கேள்வி எழுப்பும் 4500 ஆண்டு பழமையான எலும்புக் கூட்டின் ஆய்வு

ஆரியர் படையெடுப்பு உண்மையா? - கேள்வி எழுப்பும் 4500 ஆண்டு பழமையான எலும்புக் கூட்டின் ஆய்வு

webteam

கடந்த கால வரலாறு தொடர்பான வாதங்கள், கருத்துகள், கோட்பாடுகள் காலந்தோறும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ள தரவுகள் இன்னும் பெரிய அளவு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதுதான். ஆய்வுகள் தொடர தொடர புதிய கருத்துகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். அந்த வகையில், புதிய ஆய்வு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஹரப்பா நாகரிகத்தையொட்டிய டிஎன்ஏ அடிப்படையிலான அந்த தொல்லியல் ஆய்வு, ஆரிய படையெடுப்பு கோட்பாட்டு தவறானது என்பதற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது.

இதுவரை ஹரப்பா நாகரிகம் தொடர்பாக ஆய்வுகள் அனைத்தும் மொழிக்குடும்பம் மற்றும் தொல்லியல் பொருட்களின் அடிப்படையிலே வரையறை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆய்வு டிஎன்ஏ மூலம் செய்யப்பட்டு வருகிறது. ராக்கிகரி கல்லறைப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 61 எலும்புக் கூடுகளில் இருந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

டெக்கன் கல்லூரி துணை வேந்தர் வசந்த் ஷிண்டே, ஆராய்ச்சியாளர் நிரஜ் ராய், ஹார்வர்டு மெடிக்கல் பள்ளியைச் சேர்ந்த வஹீஸ் எம் நரசிம்மன், நதின் ரோஹ்லண்டு மற்றும் டேவிட் ரிச், எம்.ஐ.டியைச் சேர்ந்த நிக் பட்டெர்சன் ஆகியோர் இந்த ஆய்வினை 2015 முதல் 2018 வரை மேற்கொண்டனர். ஆய்வு முடிவுகள் தொடர்பாக நேற்று ஆய்வறிக்கையை வெளியிட்டனர். 

தற்போது வெளியாகியுள்ள ஆய்வு, மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஹரப்பா பகுதியில் விவசாயத்தை வளர்த்தார்கள் என்ற கருத்தை மறுக்கின்றது. அதேபோல், ஹரப்பா நாகரிக காலத்தில் மிகப்பெரிய அளவில் தெற்கு ஆசியாவிற்கு, வெளியில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்து வந்தார்கள் என்ற கருத்து மீது கேள்வி எழுப்புகிறது. 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண்ணின் எலும்பு கூடுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த கருத்தினை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், “ஆர்ய படையெடுப்பு கோட்பாடு அர்ப்பத்தனமான வாதங்களின் அடிப்படையில் கட்டமைப்பட்டது. ஆரிய படையெடுப்போ, ஆரிய இடம்பெயர்வோ எதுவுமே நடைபெறவில்லை. வேட்டையாடிய காலம் முதல் நவீன காலம் வரை தெற்கு ஆசியாவின் சொந்த மக்களுக்கு வெளியில் இருந்து நாகரிகத்தை யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. சொந்தமாகவே எல்லாவற்றினையும் உருவாக்கினார்கள்.

ஹரப்பா மக்கள் விவசாயத்தை வெளியில் இருந்து வந்தவர்களிடம் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களே தனித்துவமான விவசாய நடைமுறையை கடைபிடித்தார்கள். வடமேற்கு தெற்காசியாவில் இருந்த சிந்து சமவெளி நாகரீகம் போல் மற்ற இடங்களில் இருக்கவில்லை. அதாவது வெளியில் இருந்தவர்கள் விவசாய முறையை கற்பிக்கவில்லை, அங்கிருந்தவர்களே அதனை தெரிந்து வைத்திருந்தார்கள்” என்பதை இந்த ஆய்வு அழுத்தமாக முன் வைக்கிறது. 

இதற்கு முன்பாக அம்பேத்கரும் தன்னுடைய ஆய்வில் ஆரியப் படையெடுப்பு இந்தியாவில் நிகழவே இல்லை என்று கூறியிருந்தார். “ஆரியர்கள் படையெடுத்து வந்து மற்ற இனங்களை அடக்கி ஒடுக்கினார்கள் என்று கூறினால்தான் அவர்களது மேம்பாட்டு நிலையை நிரூபிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்ட மேலைய எழுத்தாளர்கள், ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தார்கள் என்றும், தாசர்களையும் தஸ்யூக்களையும் வெற்றி கொண்டார்கள் என்றும் கதை கட்டி விட ஆரம்பித்தார்கள்” என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.