பெரும் பரபரப்புக்கிடையில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. 5 நாட்களுக்கு மேலாக குறுகிய இடத்தில் சிக்கித்தவிக்கும் 40 தொழிலாளிகளுக்கும், கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து அதிகரித்துவருகிறது.
சுரங்கம் இடிந்து 5 நாட்களாக தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணியில் பல சவால்கள் அடுக்கடுக்காக எழுந்துள்ளன. “இமய மலையோர பகுதியில் உள்ள பாறைகள் இயல்பாகவே மென்மையானவை என்பதால் சுரங்கம் எளிதில் இடியும் அபாயம் உள்ளது. எனவே கவனமாகத்தான் துளையிட வேண்டும்” என்று தேசிய
நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு நிறுவன இயக்குநர் அன்ஷு மணிஷ் கல்கோ கூறுகிறார்.
மீட்பு பணியின் போதும் மண் சரிவு இருந்தது பணியில் பின்னடைவை ஏற்படுத்தியது. சுரங்கத்தில் துளையிடும் கருவி போதுமான வலிமை கொண்டதாக இல்லாததால் இடிபாடுகளை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மறுபுறம் சுரங்கத்திற்காக
நிலத்தை ஏற்கனவே பரவலாக தோண்டியுள்ளதால் மண் இளகி
புதையும் சூழலும் இருக்கிறது.
கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் குறையும் வாய்ப்புள்ளதால் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இப்படி பல சவால்கள் இருந்தாலும் மிக கவனமான திட்டமிடலுடன் மீட்பு பணிகள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளன.
இந்திய ராணுவம் பயன்படுத்தும் 25 டன் எடையுள்ள, ஒரு மணி நேரத்தில் 5 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் திறனுள்ள அதிநவீன சாதனம் டெல்லியிலிருந்து விமானம் மூலம் அவசரமாக
வரவழைக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாற்று
ஏற்பாடாக வேறு ஒரு பகுதி வழியாகவும் துளையிடவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் துளையிட்ட பின் அதன் வழியாக 3 அடி
அகலமுள்ள குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக செருகி அதன் வழியே தொழிலாளர்களை மீட்பதுதான் திட்டமாக உள்ளது. இதற்கிடையே சுரங்க மீட்பு பணிகளில் அனுபவம் வாய்ந்த தாய்லாந்து நாட்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட உள்ளனர்.
தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவை தொடர்ந்து உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றன. தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் நொடியும் தாமதிக்காமல் அவர்களுக்கு சிகிச்சை தர 6 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்று சில்க்யாரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.