இந்தியா

முன்பதிவு செய்த பின்னரும் தடுப்பூசி கிடைக்காதது ஏன்? : மத்திய அரசு விளக்கம்

முன்பதிவு செய்த பின்னரும் தடுப்பூசி கிடைக்காதது ஏன்? : மத்திய அரசு விளக்கம்

நிவேதா ஜெகராஜா

‘கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துவிட்டு, அங்கு நேரடியாக செல்லும்போது அங்கு தடுப்பூசிக்கான ஸ்லாட் இல்லை’ என சில செய்திகள் வெளிவந்தன. இந்தக் குற்றச்சாட்டை, மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

கோவின் இணையத்தில், முன்பதிவு செய்யப்படும் இடங்கள் அனைத்தும் மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் அல்லது தடுப்பூசி போடும் இடங்களிலுள்ள பொறுப்பு அலுவலரின் ஆலோசனைக்கிணங்கவே போடப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே நேரில் செல்லும்போது, அங்கு ஸ்லாட் இல்லாமல் போக வாய்ப்பில்லை என அமைச்சகம் உறுதியாக கூறியுள்ளது.

இருப்பினும், ‘தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்துவிட்டு நேரில் வந்தபின்னர், ஸ்லாட் இல்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் பின்னணியில், தடுப்பூசி பற்றாக்குறைதான் காரணியாக இருக்கிறது என்றும், அதனால் மட்டுமே அன்றைய தினம் பல இடங்களில் ஸ்லாட்கள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஸ்லாட் திட்டமிடுதலில் தவறு என்பதை ஏற்க முடியாது' என சொல்லப்பட்டுள்ளது.

“இப்படி ஒரு சூழல் ஏற்பட்டது, தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரில் வந்தவர்களுக்கு நிச்சயம் சிரமமான சூழல்தான்” என்று ஒப்புக்கொண்டுள்ள மத்திய அமைச்சகம், இதை சரிசெய்ய வேறொரு வழியையும் கையில் எடுத்துள்ளது. அதன்படி தடுப்பூசி ஸ்லாட் பதிவு செய்து – பின் பற்றாக்குறையால் அது நடக்காமல் போனவர்களுக்கு, அவர்களின் தடுப்பூசி ஸ்லாட் மறுதிட்டமிடலுக்கு அரசு வழிவகை செய்யும். இம்மாதத்துக்கான தடுப்பூசி கிடைத்தவுடன், பதிவாகும் ஸ்லாட்களில், அன்றைய தினம் தடுப்பூசி கிடைக்கப்பெறாதவர்களுக்கு ரீ-ஷெட்யூல் செய்யப்பட்டு பதிவுகள் தரப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆகவே அவர்கள் மீண்டுமொரு முறை தங்கள் விவரங்களை பதிவுசெய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரீ-ஷெட்யூல் அனைத்தும் முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்போடு, தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் அதற்கான சான்றிதழ் கிடைக்கப்பெறாதவர்களுக்கு, அவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வழியாக அவர்களின் சான்றிதழுக்கான இணைய முகவரி அனுப்ப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மீண்டுமொரு முறை சான்றிதழ் தாமதப்படுவதை தவிர்க்க, மாநில அரசுகளின் சார்பில், அன்றன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விவரங்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

தகவல் உதவி : TheNewIndianExpress