இந்தியா

‘இரும்பு மனிதரின் இதயம்’ - வப்பலா பங்குன்னி மேனனை தெரியுமா? 

‘இரும்பு மனிதரின் இதயம்’ - வப்பலா பங்குன்னி மேனனை தெரியுமா? 

webteam

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று சர்தார் வல்லபாய் பட்டேலை கொண்டாடுகிறோம். அதற்கு என்ன காரணம் என்பது பலருக்கு தெரியாது. அவர்தான் நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த பிராந்தியங்களை ஒன்றாக இணைத்தார். ஆகவே அவரைத் தேசம் இரும்பு மனிதர் என்று கூறுகிறது.

(வி.பி.மேனன்)

ஆனால் இந்த இரும்பு மனிதருக்குள் இதயமாக ஒருவர் இருந்தார். அவர் சர்தார் பட்டேல் நினைப்பதற்கு முன்பே அவரது விரும்பத்தை புரிந்து கொண்டு அதனை நிறைவேற்றினார். ஆனால் பட்டேலை தெரிந்து கொண்ட அளவுக்கு அவரின் மூளையாக இருந்தவரை யாரும் அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் அரசியல்வாதியல்ல; தலைவர் அல்ல; அதிகாரி. ஆனால் இந்தியாவிற்கு கிடைத்த அரிய அதிகாரிகளில் அவரும் ஒருவர். அவர் மட்டும் இல்லை என்றால் இந்திய பிராந்தியங்கள் ஒன்றாக ஒரே குடையின் கீழ் வந்திருக்காது. அந்த அதிகாரிக்கு இன்று 126ஆவது பிறந்தநாள். அவர் பெயர்; வி.பி.மேனன்.

இவர் செய்த பணிகள் என்ன?

1893 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சமஸ்தானம் ஒட்டப்பாலத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் வப்பலா பங்குன்னி மேனன் (Vappala Pangunni Menon). இவர் 12 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் முதல் குழந்தையாக பிறந்தார். இவரது குடும்ப வறுமையால் இவர் தனது 13ஆவது வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் கட்டுமான பணி, ரயில்வே துறை உள்ளிட்ட வேலைகளை செய்தார். அதன்பிறகு இவர் தட்டச்சு கற்றார். இதனைத் தொடர்ந்து ஆங்கில மொழியில் இவர் தட்டச்சை சிறப்பாக செய்ததால் இவருக்கு 1929ஆம் ஆண்டு ஷிம்லாவில் ஆங்கிலேயர்களின் இந்திய அரசு நிர்வாகத்தில் கிளர்க் பணி கிடைத்தது. 

இதன் பிறகு இவர் அங்கு சிறப்பாக பணியாற்றியதால் இந்தியாவில் கடைசியாக இருந்த மூன்று வைஸ்ராய்களுக்கு சிறப்பு ஆலோசகராக இருந்தார். அத்துடன் 1946ஆம் ஆண்டு மறுசீரமைப்பு ஆணையத்தில் பணிப் புரிந்தார். குறிப்பாக இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்  பிரிவினைக்கான திட்டம் வகுப்பதில் இவர் வைஸ்ராய் மவுண்ட் பேட்டனுக்கு உறுதுணையாக இருந்தார்.

அதற்குப் பிறகு இந்தியாவிற்கு விடுதலை அளிப்பதற்கு முன்பு 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் மாநிலங்களுக்கான அமைச்சகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்திற்கு செயலாளராக வி.பி.மேனன் நியமிக்கப்பட்டார். இந்த அமைச்சகத்தின் முக்கிய பணி அப்போது இருந்த 565 சமாஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதாகும். 

இதற்காக முக்கிய திட்டத்தை வகுத்தவர் வி.பி.மேனன். இவர் ஜுனாகர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல சமஸ்தானங்களின் ராஜாக்களிடம் சென்று இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்புதலை பெற்றார். இந்திய அரசு அந்தச் சமஸ்தானங்களின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளியுறவு ஆகியவற்றில் அதிகாரம் செலுத்தும் என்ற திட்டத்தை இவர்தான் வகுத்தார். 

இதன்மூலம் தான் இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மகாராஜா ஹரி சிங்கை இந்தியாவுடன் இணைய ஒப்பந்தத்தை கையெழுத்து இட வைத்தார். இவர் சுதந்திர இந்தியாவில் 565 சமஸ்தானங்களை சர்தார் பட்டேல் ஒன்றிணைத்ததற்கு முக்கிய மூளையாக செயல்பட்டார். 

இவர் ‘The Transfer of Power in India’ , ‘ The Story of the Integration of the Indian States’ ஆகிய இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் சில காலம் ஒரிசா மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக பணியாற்றினார். இவர் 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இறந்தார்.