தங்களது குழும ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மே 1-ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது ரிலையன்ஸ்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்துள்ளன. இதற்கிடையில் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மே 1-ம் தேதி முதல், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சுய தடுப்பூசி திட்டத்திற்கு ரிலையன்ஸ் - சுரக்ஷா (R-Surakshaa) என பெயரிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீத்தா அம்பானி இருவரும் இணைந்து ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''கொரோனா பரவல் மிக வேகமாக பரவிவருகிறது. நாம் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். எந்தவித தாமதமும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம், மேலும் தகுதி வாய்ந்த உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்துகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.