Rekha Singh Facebook
இந்தியா

கல்வான் மோதலில் வீர மரணமடைந்த கணவர் - துணிச்சலுடன் ராணுவத்தில் அதிகாரியான மனைவி!

ராணுவ வீரரான தனது கணவர் தீபக் சிங் வீர மரணமடைந்த நிலையில் அவரது மனைவி ரேகா ராணுவ அதிகாரியாக தேர்வாகி இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Justindurai S

இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய – சீனப் படைகள் மோதிக் கொண்டன. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். கல்வான் மோதலில் வீர மரணம் அடைந்த வீரர்களில் லான்ஸ் நாயக் தீபக் சிங்கும் ஒருவர் ஆவார்‌. வீர மரணம் அடைந்த தீபக் சிங்குக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

Rekha Singh

இதனிடையே தீபக் சிங்கின் மனைவியான ரேகா, இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். சென்னையில் இருக்கும் ராணுவப் பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பயிற்சி மேற்கொண்டு வந்தார் ரேகா. இவரது பயிற்சி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ரேகா.

சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் 11 மாத பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கான நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்ற 200 அதிகாரிகளில் 40 பேர் பெண்கள் ஆவார். இதில் ரேகா உள்பட 5 பெண் அதிகாரிகள் இந்திய எல்லையோர ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இவர்களுக்கு பீரங்கி படையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.