இந்தியா

ஆங்கிலத்தில் பதவியேற்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை சரிவு

ஆங்கிலத்தில் பதவியேற்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை சரிவு

webteam

ஆங்கிலத்தில் எம்.பி.யாக பதவியேற்றவர்களின் எண்ணிக்கை இந்த முறை வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் மாநில மொழியில் பதவியேற்றுள்ளனர்.

17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதி எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டார். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றனர். அப்போது பெரும்பாலான எம்.பி.க்கள் ‘ தமிழ் வாழ்க’ என்றனர். சிலர் ‘ வாழ்க பெரியார்’ என்றும் சிலரோ ‘ வாழ்க காமராஜர்’ எனவும் கூறினர்.

இந்நிலையில் இந்த முறை ஆங்கிலத்தில் எம்.பி.யாக பதவியேற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதற்கு பதிலாக மாநில மொழியில் பதவியேற்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தை விடுத்து மாநில மொழியில் பதவியேற்றவர்கள் பலரும் தென்னகத்தை சேர்ந்தவர்கள். 

கடந்த 2014-ஆம் ஆண்டு, 114 பேர் ஆங்கில மொழியில் எம்.பி.க்களாக பதவியேற்ற நிலையில் இந்த முறை வெறும் 54 பேர் மட்டும் ஆங்கிலத்தில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர். அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள எந்த மொழியிலும் உறுப்பினர்கள் எம்.பியாக பதவியேற்றுக் கொள்ளலாம். அதன்படி மாநில மொழியில் எம்.பி.க்களாக பலரும் பதவியேற்றனர்.

அதேசமயம் ஹிந்தி மொழியில் பதவியேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு 202 பேர் ஹிந்தி மொழியில் எம்.பி.யாக பதவியேற்ற நிலையில் இந்த முறை சற்று அதிகமாக 210 பேர் ஹிந்தி மொழியில் எம்.பி.யாக பதவியேற்றக் கொண்டனர். ஆனால் கடந்த 2009-ஆம் ஆண்டை காட்டிலும் தற்போது குறைவுதான். ஏனென்றால் கடந்த 2009-ஆம் ஆண்டு ஹிந்தியில் எம்.பி.யாக பதவியேற்றவர்களின் எண்ணிக்கை 229 ஆகும்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2014-ஆம் ஆண்டு வெறும் 7 எம்.பி.க்களே தமிழ் மொழியில் பதவியேற்றனர். மற்ற 32 பேரும் ஆங்கில மொழியில் பதவியேற்றனர். ஆனால் இந்த முறை 39 எம்.பி.க்களும் தமிழ் மொழியிலேயே பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல தெலங்கானா, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பதவியேற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அதிகரித்துள்ளது.