Red Light On, Gaadi Off Campaign Twitter
இந்தியா

அதிகரிக்கும் காற்று மாசு... கட்டுக்குள் கொண்டுவர டெல்லி அரசின் புதிய முயற்சி!

டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர அரசு முன்னெடுத்திருக்கும் "இன்ஜினை அணைத்து வையுங்கள்" என்ற திட்டம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

PT WEB

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மற்ற மாநிலங்களைவிட அதிகளவில் பயன்படுத்தப்படும் கனங்களும் அதன் எரிபொருளும் தலைநகரின் காற்று மாசை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Red Light On, Gaadi Off Campaign

டீசல் வாகனங்களை தடை செய்வது, மின்சார வாகனங்களை இயக்குவது மற்றும் எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு கணிசமாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இதனைத் தடுக்க முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் போது இன்ஜினை அணைத்து வைக்க வேண்டும் என்ற பிரசாரத்தை தன்னார்வ அமைப்புகளும் டெல்லி அரசாங்கமும் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளன.

வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை கண்டதும் இன்ஜினை அணைத்துவிட வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினரும் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காட் ப்ளேஸ் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்ட டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூ வழங்கி இஞ்சினை அணைத்து வைக்கும் படி கோரிக்கை விடுத்தார்.

Red Light On, Gaadi Off Campaign

சில வருடங்களுக்கு முன்பு "Odd-Even" என அழைக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் ஒருநாளும், இரட்டைப்படை எண்களைக் கொண்ட வாகனங்கள் மறுநாளும் பயன்படுத்த அரசு அறிவுறுத்தியிருந்தது.

அதே போல் இந்த ஆண்டு "இன்ஜினை அணைத்து வைக்கலாம்" என்கிற விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் காற்று மாசு டெல்லி வாழ் மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகளை உண்டாக்கி வரும் நிலையில், சாலையில் காத்திருக்கும் போது இன்ஜினை அணைத்து வையுங்கள் என மேற்கொள்ளப்படும் இந்த பிரசாரம் வரும் நாட்களில் தீவிரமடையும் என கருதப்படுகிறது.