பெங்களூரு - தண்ணீர் தட்டுப்பாடு முகநூல்
இந்தியா

கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் இந்தியாவின் IT தலைநகரம்... பின்னணி என்ன?

கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக தலைநகரம் பெங்களூரு. இந்தியாவின் ஐ.டி. தலைநகரமாக வர்ணிக்கப்படும் பெங்களூருவின் தண்ணீர் பிரச்னையின் பின்னணிகளை பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்.

PT WEB

ஒரு காலத்தில் கார்டன் சிட்டி என்றழைக்கப்பட்ட நகரம் பெங்களூரு. இப்போது 66 விழுக்காடு பசுமைப்பரப்பை இழந்துவிட்டது. 74 விழுக்காடு நீர்நிலைகளை பறிகொடுத்துவிட்ட அப்பெருநகரத்தில், கட்டுமானங்களின் பரப்போ 584 விழுக்காடு அதிகரித்துவிட்டது.

இதுபோன்ற காரணங்களால் அந்த நகரம் கொடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கிறது. பெங்களுருவின் குடிநீர் ஆதாரங்களாக காவிரியும், தென்பெண்ணையும் இருக்கின்றன. காவிரி மூலம் நாள் ஒன்றுக்கு 1,450 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் 500 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. |

ஓராண்டில் 1,020 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடிய பெங்களூருவில் கடந்த ஆண்டு 5.3 விழுக்காடு அளவுக்கு பற்றாக்குறையாக பெய்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 41 ஏரிகளில் 95 விழுக்காடு பெரிதும் மாசடைந்து காணப்படுகின்றன.

நிலத்தடி நீரை பயன்படுத்தும் அளவு 45 விழுக்காட்டை தாண்டி விட்டது. பெரிய அளவில் அடுக்கு மாடி கட்டடங்கள், கான்கிரீட் சாலைகள் அமைப்பதும் அதிகரித்து விட்டன. இதனால் மழைநீர் நேரடியாக பூமிக்குள் செல்ல முடியாமல் நிலத்தடி நீர் குறைந்து விடுகிறது. இந்த சிரமங்களுக்கு மத்தியில் புறநகர்ப் பகுதிகளையும் பெங்களூரு நகருடன் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தண்ணீர் தேவையை பெரிதும் அதிகரித்துள்ளது.

பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புறநகர்ப் பகுதிகளில் இருந்து தினசரி 3,500 லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. நகர்மயமாதல் அதிகரித்தல், நிலத்தடி நீர் மட்டம் சரிவு, நீர் நிலைகளில் மாசு, நகர கட்டமைப்பு, பருவநிலை மாற்றத்தால் மழையின் அளவு குறைவது போன்ற காரணங்கள் பெங்களூரு நகரின் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணங்களாக உள்ளன.

இதேநிலை நீடித்தால் 2038 ஆம் ஆண்டுக்குள் பெங்களூருவில் வனப்பரப்பு 0.65 % ஆக குறைந்துவிடும் என்றும், இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் (Centre for Ecological Sciences (CES) தெரிவித்துள்ளது. தற்போது 14,78,412 மரங்கள் இந்நகரத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி 100 பேருக்கு 17 மரங்கள் என்ற அளவிலேயே இருக்கின்றன. ஒருவருக்கு 7 முதல் 8 மரங்கள் என்ற நிலையை எட்டினால் மட்டுமே பெங்களூரு இழந்த தனது இயல்பை மீட்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.