மத்திய அமைச்சர் அழைப்பின் பேரில் டெல்லியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடன் மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் சுமார் ஆறுமணி நேரம் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “ஜூன் 15 ஆம் தேதிக்குள் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மல்யுத்த வீரர்களுக்கு உறுதி அளித்துள்ளோம். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நடத்தப்படும். மல்யுத்த சம்மேளனத்தின் உள் புகார் குழு ஒரு பெண் தலைமையில் அமைக்கப்படும்.
அதேபோல், ‘மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்-களையும் திரும்பப் பெற வேண்டும். பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது’ என்று மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் ஜூன் 15 ஆம் தேதிக்கு முன் போராட்டம் நடத்த மாட்டோம் எனவும் உறுதியளித்துள்ளனர்” என தெரிவித்தார்.