Wrestlers protest File Image
இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பக்கபலமாக நிற்கும் விவசாய சங்கங்கள்... ஆதரவின் பின் உள்ள அழுத்தமான வரலாறு!

மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டத்துக்கு விவசாயிகள், விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவிப்பது ஏன் தெரியுமா?

PT

‘இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜகவை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங் எங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தார்; அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி கடந்த ஜனவரி மாதம் முதல் சாக்சி மாலிக், தினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் புனியா உட்பட பல மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டி, உலக மல்யுத்தம் சாம்பியன்சிப் போட்டி உள்ளிட்டவற்றில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளாவர்.

Protesting wrestler sakshi malik

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக போராடி வந்த இவர்களை, டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கடந்த ஞாயிறன்று வெளியேற்றியது. ஆனாலும் இவர்களது போராட்டம் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க விவசாய சங்கங்களின் ஆதரவு என்பது மிக முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக தீவிரமாக செயல்படும் பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட முக்கிய விவசாய சங்கங்கள் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

தொடர்ந்து இந்த மாநிலங்களில் காப் பஞ்சாயத்து என அழைக்கப்படும் கிராம பஞ்சாயத்துகளை நடத்தி ஆதரவு திரட்டியும் வருகின்றனர். ஒரு கட்டத்தில் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் தூக்கி எறிய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் முடிவு செய்தபோது அவர்களை சமாதானப்படுத்தி, “ஐந்து நாட்கள் அமைதி காத்திருங்கள். அதற்கு பிறகும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டெல்லியில் எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடருவோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள் இவர்கள்.

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

இந்த அளவிற்கு விவசாய சங்கங்கள் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் பின்னணி விவசாய குடும்பத்தைச் சார்ந்ததாகவே உள்ளது என்பதுதான். குறிப்பாக ஹரியானா மாநிலத்தை பொருத்தவரை விவசாயம் தான் பிரதான தொழில். தமிழ்நாட்டில் எப்படி திருவிழா போன்ற சமயங்களில் கபடி விளையாட்டு நடத்தப்படுகிறதோ அதேபோல ஹரியானா, உத்தர பிரதேசம் மாநிலங்களில் மல்யுத்த போட்டி நடத்தப்படும்.

அதில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகள் பெரும்பாலும் கிராமங்களை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். போலவே அவர்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் என்பது பெரும்பாலும் விவசாய நிலங்களில் தான் நடத்தப்படும். அதன் பிறகு அவர்கள் அகாடமி உள்ளிட்டவற்றில் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். ஆக, பெரும்பாலான வீரர்களின் குடும்பம் ஏதாவது ஒரு வகையில் விவசாயத்துடன் தொடர்புடையதாக இருக்கும். மேலும் விவசாயிகள் கிராம பஞ்சாயத்துகளிலோ அல்லது பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட முக்கிய விவசாய சங்கங்களிலோ உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருப்பார்கள்.

மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங்

இயல்பாகவே மல்யுத்தமும் விவசாயமும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுடன் ஒன்று நேரடியாக தொடர்புடையது. டெல்லியில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்திய போது டெல்லியின் காசியாபாத், டிக்ரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை உற்சாகமாக வைத்திருக்க பல நாட்கள் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மல்யுத்த போட்டிகளை நடத்தினார்கள் என்பதே இதற்கு போதுமான சான்று. விவசாயிகள் போராட்டம் நடந்த போது கிட்டத்தட்ட அனைத்து மல்யுத்த வீரர் வீராங்கனைகளும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்கள். எனவே தற்பொழுது அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் விவசாயி சங்கங்கள் பதிலுக்கு குரல் கொடுக்கின்றனர்.