ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அரசு எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கத் தயார் என மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் தேவை உயர்ந்துள்ளதால் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அரசு எந்தவித முயற்சிகளையும் எடுக்கத் தயாராக உள்ளது என்று மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாளை நடக்கும் விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி தரப்படுமா, அதற்கு தமிழக அரசின் பதில் என்னவாக இருக்கும், மத்திய அரசு என்ன சொல்லப் போகிறது, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னை சரிசெய்வது எவ்வாறு உள்ளிட்ட விவரங்கள் குறித்தான தெளிவான முடிவு கிடைக்கப்பெறும் எனத் தெரிகிறது.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் “ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதி வேண்டும். ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்” எனத் தெரிவித்தது.