வேளாண் சட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பஞ்சாப் மாநிலம் சிங்கு எல்லையில் போராடி வரும் வேளாண் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ் அறிவித்துள்ளார்.
மூன்று வேளாண்சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் 28 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது மீண்டும் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என வேளாண் சங்கத் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் முன், மத்திய அரசு திறந்த மனதுடன் வரவேண்டும்.சட்டங்கள் தொடர்பாக ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும்.வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்க்கிறோம்.அதே நேரம் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் எழுத்துப்பூர்வமான உறுதியுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் அமர வேண்டும்.”என்றார்.
மற்றொரு விவசாய தலைவரான சிவ குமார் காக்கா கூறும்போது, போராடும் விவசாயிகள் எளிமையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையிலான சூழலையும் மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும். அதே நேரம் தனது பிடிவாதத்தை விட்டு கீழிறங்கி வந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்” என்று கூறினார்.