இந்தியா

பழைய நோட்டுகளை எண்ண மெஷின்கள் பயன்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி

பழைய நோட்டுகளை எண்ண மெஷின்கள் பயன்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி

rajakannan

திரும்ப பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. கறுப்புப் பணம், கள்ள நோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, செல்லாத நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அதை மார்ச் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த உயர் மதிப்புடைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர்.

திரும்ப பெறப்பட்ட பழைய நோட்டுகளை எண்ணும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்த பணிகள் முடிவடையால நீண்டு கொண்டே சென்றது. இதனையடுத்து, அனைத்து பழைய நோட்டுகளும் திரும்ப பெறப்பட்டு விட்டதாக, அதில் கருப்பு பணம் எவ்வளவு என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. 

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2016-17 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் 99 சதவீதம் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு பயன்படும் இயந்திரங்கள் தனது எந்தவொரு அலுவலகத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவலில் இது தெரியவந்துள்ளது. ரூபாய் நோட்டுகளை எண்ண எத்தனை ஆட்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை கூற மத்திய அரசு மறுத்துவிட்டது.