இந்தியா

மது விற்பனையால்தான் மாநிலங்களின் கஜானா நிரம்புகிறதா? - எத்தனாவது இடத்தில் தமிழ்நாடு?

மது விற்பனையால்தான் மாநிலங்களின் கஜானா நிரம்புகிறதா? - எத்தனாவது இடத்தில் தமிழ்நாடு?

JananiGovindhan

மாநிலங்களின் கஜானாவுக்கு முக்கிய வருவாயாக மதுவிற்பனை இருப்பதாக லைவ் மின்ட் தளம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் நிதி வருவாய்க்கு மது விற்பனையே முக்கிய பங்காற்றுகின்றன என வழக்கமாக கூறப்படுவதுண்டு. இருப்பினும் அதற்கென தரவுகள் எதுவும் பெரிதளவில் வந்ததாக தெரியவில்லை.

இப்படி இருக்கையில், பிரபல ஆன்லைன் செய்தி தளமான லைவ் மின்ட் மது விற்பனை குறித்தும் அதனால் மாநிலங்களுக்கு வரக்கூடிய வரி வருவாய் குறித்தும் ரிசர்வ் வங்கியின் கூற்று எனக் குறிப்பிட்டு தரவுகளை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, 2021 - 2022ம் ஆண்டின் போது மாநிலங்களின் நிதி வருவாய்க்கான கஜானாவில் மது விற்பனையால் கிடைத்த வரி வருமானமே அதிகப்படியாக நிரப்பப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதுபோக, மொத்த வரி வருவாயில் மது விற்பனையால் கிடைக்கும் கலால் வரியின் பங்கு மட்டுமே அதிகம் பெற்ற மாநிலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், புதுச்சேரி 34 சதவிகிதமும், உத்தராகண்ட் 23, சிக்கிம் 23, உத்தர பிரதேசம் 22.6, கர்நாடகா 22, மேற்கு வங்கம் 21.1, சத்தீஸ்கர் 20, ஆந்திரா 19.7, இமாச்சல் 19.5, தெலங்கானா 18.3, ராஜஸ்தான் 16.3, பஞ்சாப் 16.3 மற்றும் மத்திய பிரதேசம் 16.1 சதவிகிதம் முறையே பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடும், கேரளாவும் நீங்கலாக மற்ற 3 மாநிலங்களும் ஒரு யூனியன் பிரதேசமும் முக்கிய இடத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

மத்திய அரசை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரக்கூடிய பாஜகவாக இருந்தாலும் சரி, மாநிலங்களை ஆளக் கூடிய பாஜக மற்றும் இதர கட்சிகளாக இருந்தாலும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தொடர்ந்து கூறி வந்தாலும் மது விற்பனையை நம்பித்தான் அரசு நிர்வாகத்தையே நடத்த வேண்டும் என்ற பேச்சுகளுக்கு அச்சாணியாகவே ரிசர்வ் வங்கியின் அறிக்கை இருப்பதாக பொருள்படுகிறது.

(courtesy - mint)

அதேவேளையில், மக்களின் உயிரை குடிக்க குடியே காரணமாக இருக்கும் போது அதனை ஒழிப்பதற்கான வேலைகளை முடுக்கிவிடாமல், ஆண்டுதோறும் விற்பனையை மட்டுமே அதிகபடுத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயால் திளைப்பது நல்ல முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டக்கூடிய நிர்வாகமாக இருப்பது டாஸ்மாக்தான். ஆனாலும் அதற்கான வரி வருவாய் தமிழ்நாடு அரசுக்கு முழுமையாக வந்து சேர்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். இந்தியாவிலேயே அதிகளவு மது அருந்தக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் இருக்கும் வேளையில், அதற்கான வருவாயிலும், வரியும் முறையாக கொடுக்கப்படுவதில்லை என தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருக்கக் கூடிய பழனிவேல் தியாகராஜன், “டாஸ்மாக் நிறுவனத்தின் சிஸ்டமே சரியில்லை. அரசு நிர்ணயிக்கும் விலை ஒன்றாக இருந்தாலும் அது விற்கப்படும் போது அதிகமாகவே இருக்கிறது. ஸ்டிக்கரில் ஒரு விலை, விற்கும் போது ஒரு விலையாக இருக்கிறது. அந்த வருவாயெல்லாம் எங்கே செல்கிறதென்றே தெரியவில்லை. ஆகையால் மொத்தமும் கணினி மயமாக்கப்பட்டால்தான் எல்லா குளறுபடிகளுக்கும் தீர்வு கிட்டும்” என கடந்த ஆண்டு மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.