UPI பரிவர்த்தனை முகநூல்
இந்தியா

இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி 1.1% பரிமாற்ற கட்டணம்! - ஜன.1 முதல் புதிய விதிமுறைகள் அமல்!

யுபிஐயின் பயன்பாட்டை அதிகரிக்க ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

Angeshwar G

நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கிய பங்காற்றுகிறது.

நகரம் முதல் கிராமம் வரை யுபிஐ பரிவர்த்தனை செயல்பாட்டில் உள்ள நிலையில், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் என யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் 8 ஆயிரத்து 375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. யுபிஐ பரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

UPI

இந்நிலையில், யுபிஐ பயன்பாட்டை மேலும் அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

நடைமுறைக்கு வரும் விதிமுறைகள்:

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தெரிவித்துள்ளதன்படி,

* யுபிஐ செயலிகளான Google Pay, Paytm, PhonePe போன்ற செயலிகள், ஒருவருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத ஐடிக்களை செயலிழக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

* UPI பரிவர்த்தனைகளுக்கான தினசரி பரிமாற்ற வரம்பு இப்போது அதிகபட்சமாக ₹ 1 லட்சமாக இருக்கும்.

* ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகளை (பிபிஐ) பயன்படுத்தி செய்யப்படும் ரூ.2,000-க்கும் மேல் உள்ளசில வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீத பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

* அதிகரித்துவரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடி நடவடிக்களைகளைத் தடுக்க பயனர் ஒருவர், இதுவரை பணப்பரிமாற்றம் மேற்கொள்ளாத ஒருவருக்கு ரூ.2000 ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்யும் போது 4 மணி நேரம் அவகாச வரம்பு பொருந்தும்.

* மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனையின் உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

என்பன போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி ஜப்பானிய நிறுவனமான ஹிட்டாச்சி நிறுவனத்திடம் இணைந்து யுபிஐ ஏடிஎம்களை அமைக்கும். இதன் மூலம் QR குறியீட்டை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.