இந்தியா

ஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா ?

ஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா ?

webteam

இ.எம்.ஐ குறித்த ஆர்.பி.ஐ. அறிவிப்பு கிரெடிட் கார்டு பேமெண்டுகளுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கும் 3 மாதங்கள் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்றோர் 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்ட தேவையில்லை. மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதஙகள் இ.எம்.ஐ கட்டத் தேவையில்லை. அது ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் கடன் வழங்குவதை எக்காரணத்தை கொண்டும் வங்கிகள் குறைத்து விடக்கூடாது.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கியதற்கு ஆர்பிஐயின் இ.எம்.ஐ அறிவிப்பு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் நாகப்பன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “எல்லா கடன்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லும் என்றுதான் சொல்லப்பட்டது. இரண்டு விஷயங்கள் செய்துள்ளனர். முதலாவதாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளனர். இரண்டாவது இ.எம்.ஐ கட்டுவது தள்ளிவைப்பு. இது எல்லா கடன்களுக்கும் பொருந்தும் என்று சொல்லியுள்ளனர். ஆனால் ரிசர்வ் வங்கி ஆன்லைனில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் அனைத்து கடன்களுக்கும் செல்லும் என கூறியிருந்தாலும் கடன் அட்டை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அது கடனாக கருதப்படுமா என்பது எனக்கு தெரியவில்லை. கடன் அட்டை குறித்த விளக்கத்தை பின்னாளில் அளித்தாலும் அளிக்கலாம். அனைவராலும் தற்போது தவணையை கட்டமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதனால் அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்கும் என்றே எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.