இந்தியா

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா !

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா !

webteam

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா பதவிக் காலம் முடிய 6 மாதங்கள் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

விரால் ஆச்சார்யா இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக 2017 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் கீழ் பணியாற்றும் நான்கு துணை ஆளுநர்களில் ஒருவராக ஆச்சார்யா இணைந்தார். 

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் அண்மையில் ராஜினாமா செய்தார். அவருக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையேயான கருத்து மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது. இருப்பினும் தனிப்பட்ட சொந்த காரணத்தினாலேயேதான் ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தெரிவித்தார். படேலின் ராஜினாமாவைத் தொடர்ந்து மத்திய நிதி ஆணையக்குழுவின் உறுப்பினர் சக்திகாந்த தாஸ் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். 

உர்ஜித் பட்டேல் பதவி விலகியதும் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யாவும் பதவி விலக உள்ளதாக அப்போது தகவல் வெளியாகியது. ஆனால் அதில் உண்மை இல்லை என ஆர்பிஐ விளக்கம் அளித்தது. இதனிடையே மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியல்ல என விரால் ஆச்சார்யா முதல் முறையாக ஒரு பொது மேடையில் கூறியிருந்தது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிய 6 மாதங்கள் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.