வங்கிகளில் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், வாராக்கடன்களாக அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எம்.கே.ஜெயின் கவலை தெரிவித்துள்ளார்.
முதலீட்டிற்கு சிரமப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிசு பிரிவின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், கிஷோர் பிரிவின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலும், தருண் பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முத்ரா திட்டத்தில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எம்.கே.ஜெயின் தெரிவித்துள்ளார். 2016-17-ஆம் நிதியாண்டில் முத்ரா திட்டத்தின் மூன்று பிரிவின் கீழ் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 312 கோடி ரூபாய் அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
அடுத்து வந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 437 கோடி ரூபாய் அளவிற்கும், 2018-19-ஆம் நிதியாண்டில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 811 கோடி ரூபாய் அளவிற்கும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வழங்கப்பட்ட கடன்களில் திருப்பிச் செலுத்தாத வாராக்கடன்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை வங்கிகள் கண்காணித்து வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.