Reserve Bank of India  File Image
இந்தியா

"ரூ.88,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மாயமா?" - ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்

சுமார் ரூ.88 ஆயிரம் கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக வெளியான தகவல்கள் தவறானவை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

Justindurai S

மனோரஞ்சன் ராய் என்ற செயற்பாட்டாளர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில், மூன்று பணம் அச்சடிக்கும் ஆலைகளில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் 8,810.65 மில்லியன் தாள்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரிசர்வ் வங்கி ஆவணங்களின்படி, 500 ரூபாய் நோட்டுகள் 7,260 மில்லியன் தாள்கள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. ஆக, சுமார் 88,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக நேற்று செய்திகள் உலாவியதால் சர்ச்சை எழுந்தது.

Reserve Bank of India

இந்த நிலையில், ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக வெளியான தகவல்கள் தவறானவை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `'அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக வெளிவரும் செய்திகள் சரியானவை அல்ல. ரூபாய் நோட்டு அச்சகத்திலிருந்து ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் சரியாகக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தகவல்களை நம்பியிருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என்று கூறப்பட்டிருக்கிறது.