இந்தியா

‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா? - ரவிக்குமார் எம்.பி விளக்கம்

‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா? - ரவிக்குமார் எம்.பி விளக்கம்

webteam

என் தொகுதி திமுக பிரமுகரின் மகள் கேட்டுக்கொண்டதாலேயே காவிரி கூக்குரல் பதாகையை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன் என எம்.பி ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும் ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் காவேரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் மரக் கன்றுகள் உற்பத்தி செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு மரக் கன்றுக்கு ரூ.42 என்ற முறையில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

இவ்வியக்கத்துக்கு பல்வேறு துறையினரிடம் இருந்து ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. பலரும் ஜக்கி வாசுதேவை நேரில் சந்தித்தும், சமூக வலைத்தளங்களில் காணொளிகள், புகைப்படங்களை வெளியிட்டும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் `காவேரி கூக்குரல்' பதாகையைத் தாங்கியபடி இருக்கும் புகைப்படம் வெளியானது. இது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. 

இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், “என் தொகுதி மக்களுக்கு ஒரு நாளுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் எனக் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக விநியோகித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில், என் தொகுதியைச் சார்ந்த திமுக பிரமுகர் ஒருவர் தன் குடும்பத்துடன் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர்கள் மரக்கன்று விநியோகத்தை நான் தொடர வேண்டுமென ஊக்கப்படுத்தினார்கள். வந்தவர்கள் கிளம்பும்முன் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென விரும்பினார்கள். 

அப்போது, தி.மு.க பிரமுகரின் மகள், தான் ஈஷாவின் பசுமை அமைப்பில் இருப்பதாகவும், அந்தத் திட்டத்தைப் பரப்பும் பொருட்டு இந்தப் பதாகையை நான் கையில் ஏந்தி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆகவே அந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். நான் ஈஷாவின் ‘காவேரி கூக்குரல்’இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை. அவர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை ” எனத் தெரிவித்தார்.