நாய்களுடன் ரத்தன் டாடா புதிய தலைமுறை
இந்தியா

RIP Ratan Tata | மனிதர்கள் மீது மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்கள் மீதும் பேரன்பு கொண்டவர் ரத்தன் டாடா!

PT WEB

தொழிலதிபர் ரத்தன் டாடா மனிதர்கள் மீது மட்டுமின்றி வாயில்லா ஜீவன்கள் மீதும் பேரன்பு கொண்டவர். அதைப் பற்றிய சிறு தொகுப்பை பார்க்கலாம்...

2014 ஆம் ஆண்டு முதல் ரத்தன் டாடாவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் ஷாந்தனு என்ற 28 வயது இளைஞர். நாய்களின் மீது இருந்த அக்கறையே இருவரையும் ஒரு புள்ளியில் இணைத்தது. வாகனங்களில் அடிபட்டு இறக்கும் தெரு நாய்களை காக்கும் முயற்சியில் இறங்கினார் டாடா ஊழியரான ஷாந்தனு.

ஷாந்தனுவுடன் ரத்தன் டாடா

அதில் தொடங்கிய இவர்களின் நட்பு, இறுதி வரை தொடர்ந்தது. ஷாந்தனு தொடங்கிய இயக்கத்திற்கு பொருளுதவியும் அளித்தார் ரத்தன் டாடா. இதே போன்று, ரத்தன் டாடா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. அதில் மழைக்காலங்களில் தெருவில் வசிக்கும் நாய்கள் அடைக்கலம் தேடி வாகனங்களுக்கு அடியில் படுத்து உறங்கும் என்பதால், வாகனங்களை இயக்கும் முன்பு கவனம் தேவை என பதிவிட்டிருந்தார் ரத்தன் டாடா.

உயிர்கள் மீது அவருக்கு இருந்த நேசத்திற்கு இதுவும் ஒரு சான்று.... ஒருமுறை அலுவலக வளாகத்தில் வழிதவறி சுற்றித் திரிந்த நாயை அன்போடு அரவணைத்து அதற்கு அடைக்கலம் அளித்தார் ரத்தன் டாடா. நாயைத் தேடும் உரிமையாளர் தொடர்புகொள்ள சமூக வலைதளத்தில் மின்னஞ்சல் முகவரியையும் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு சமயம், மழையில் நனைந்த தெரு நாய்க்கும் சேர்த்து குடை பிடித்த தனது ஊழியரின் புகைப்படத்தை பகிர்ந்து மக்களை இதுபோன்றிருக்க அன்பான வேண்டுகோளையும் விடுத்தார்.

இப்படியாக ஒவ்வொருமுறையும், மனிதர்கள் மட்டுமன்றி நாய்கள் மீதும் பேரன்பு கொண்டவராக இருந்தவர் ரத்தன் டாடா. அவர் இன்று, வயதுமூப்பால் உலகை பிரிந்திருப்பது நமக்கு மட்டுமல்ல... இந்த உலகின் அனைத்து ஜீவராசிகளுக்குமே பேரிழப்புதான்.