டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முன்டா ஆகியோர் பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, இந்தியா கார்ப்ஸ் மற்றும் பிரமல் பௌண்டேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி ஆனந்த் ஷா ஆகியோர் இதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், டெல்லியில் நேற்று நடைபெற்ற பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
கொரோனா காலத்தில் பெற்றோரை அல்லது பாதுகாவலர்களை இழந்த 4,345 குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் துவங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் திட்டம் உட்பட, பி.எம்.கேர்ஸ் நிதியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் குறித்த விளக்கக்காட்சி வழங்கப்பட்டது. நாட்டிற்கு கொரோனா நேரத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி ஆற்றிய பங்கை அதன் உறுப்பினர்கள் பாராட்டினர். பி.எம்.கேர்ஸ் நிதிக்கு, முழு மனதுடன் நன்கொடை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளையானது, நிவாரண உதவிகள் மூலம் மட்டுமின்றி, துயர் தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், அவசர நிலை மற்றும் இடர்பாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப திறம்பட செயல்படும் நீண்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. பி.எம்.கேர்ஸ் நிதி அறக்கட்டளையில் இணைந்த உறுப்பினர்களை பிரதமர் வரவேற்றார்.
கூட்டத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியின் உறுப்பினர்கள், அதாவது மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் மற்றும் பி.எம்.கேர்ஸ் நிதியின் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா, ரத்தன் டாடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்கேற்புடன் பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை மேலும் விரிவான நீண்ட கால கண்ணோட்டத்துடன் செயல்படும் என்று பிரதமர் கூறினார். பொது வாழ்க்கையில் அவர்களது நீண்ட கால அனுபவம், பொது மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதில், மேலும் வீரியத்துடன் நிதி வழங்க வகைசெய்யும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.