உலகமே வியந்த இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு, சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய மறைவு ஒருபுறமிருக்க, மறுபுறம் அவரைப் பற்றிய நினைவுகளையும், அவர் உதிர்த்த வார்த்தைகளையும், அவர் பற்றிய பேட்டிகளையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாத ரத்தன் டாடாவின் காதல் கதையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ”அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பெண்ணை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவரையே திருமணம் செய்துகொள்ள எண்ணியிருந்தேன். அப்போது, தன்னை வளர்த்த பாட்டி இறந்துபோனதால் இந்தியா திரும்பி வேண்டியிருந்தது.
என்கூடவே, என் காதலியும் இந்தியா வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. காரணம், அந்தச் சமயத்தில் (1962) இந்தியா – சீனா போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து என் காதலியின் பெற்றோர் அவரை இந்தியாவிற்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் எங்கள் காதல் முறிந்தது” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.