இந்தியா

கால்களை இழந்த 'ஸ்ப்ரைட்'... உதவி கேட்டு உருகும் ரத்தன் டாடா!

webteam

கால்களை இழந்த தெருவோர நாய்க்கு உதவி வேண்டும் என தொழிலதிபர் ரத்தன் டாடா கேட்டிருப்பது பலரது கவனங்களை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அப்போது 'இணையதளத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கத் தெரியாது. ஆனால், உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்ததில் மகிழ்ச்சி' எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில பதிவுகளை இட்டு வருகிறார் டாடா. சமீபத்தில் அவர், 'ஸ்ப்ரைட்' என பெயரிடப்பட்ட நாய் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார்.

அதில், ``ஸ்ப்ரைட்டுக்கு ஓர் அன்பான குடும்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக நீங்கள் எனக்கு உதவ வேண்டும். ஒரு விபத்தால் ஸ்ப்ரைட் நாயின் கால்கள் இப்போது இல்லை. இதற்கு முன் நீங்கள் (இன்ஸ்டாகிராம் பயனாளர்கள்) எனக்கு இரண்டு முறை வெற்றிகரமாக உதவியுள்ளீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த முறையும் உங்கள் உதவி தேவைப்படுகிறது. நாயை தத்தெடுக்கும் இணைப்பு பயோவில் உள்ளது" என்று கூறியிருந்தார்.

காயங்கள் காரணமாக மும்பையில் சுற்றி திரிந்த ஸ்ப்ரைட் நாயின் பின்னங்கால்களை இரண்டை சமீபத்தில் மருத்துவர்கள் அகற்றினர். அதற்கு பதிலாக சக்கரங்களை வைத்து மருத்துவர்கள் நாயை நடமாட வைத்துள்ளனர். இதையடுத்துதான் உதவி கேட்டு டாடா பதிவிட்டார்.

டாடாவின் பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்த ஒருவர், ``சார்! தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஸ்ப்ரைட் சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமப்படுகிறதா? அதற்கு ஸ்ப்ரைட் நாய்க்கு உதவி தேவைப்படுகிறதா?" என்று கேட்டிருந்தார். அதற்கும் பதிலளித்த டாடா, ``நல்ல வேளையாக சிகிச்சை காரணமாக ஸ்ப்ரைட்டால் தானாக சிறுநீர் கழிக்க முடிகிறது" என்று கூறி இருந்தார். டாடாவின் பதிவு உடனே வைரலாக பரவியது. மேலும் சிலர் நாயை தத்தெடுக்க முன்வந்துள்ளனர்.

தொழில் உலகில் ஆகப்பெரும் மனிதராக பார்க்கப்படுபவர் ரத்தன் டாடா. அப்படிப்பட்டவரின் இந்த செயல் மனித நேயத்தின் உச்சம் என டாடாவை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு நாய்க்காக டாட்டா இவ்வளவு மெனக்கெடுவது இது முதல் முறையல்ல. இது மூன்றாம் முறை. இதற்கு முன்பு `மைரா', `சர்' என்ற இரண்டு நாய்களுக்கு தனது பதிவுகள் மூலம் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் டாடா. இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் முறையாக ஸ்ப்ரைட் நாய்க்காக உதவி கேட்டுள்ளார்.

டாடா இயல்பாகவே பிராணிகள் மீது அதீத அன்புகொண்டவர். குறிப்பாக நாய்கள் மீது. தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பேட்டிகளில், தனது வலைதள பதிவுகளில் என அனைத்திலும் செல்லப்பிராணியாக நாயை குறிப்பிட்டு இருக்கிறார் டாடா. நாய்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் டாடா இந்த முறை ஸ்ப்ரைட் நாய்க்கு நல்ல குடும்பத்தை கண்டறிவார் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.