இந்தியா

"அது என்னுடைய பதிவல்ல" வைரலான கருத்தும் ரத்தன் டாடாவின் விளக்கமும் !

"அது என்னுடைய பதிவல்ல" வைரலான கருத்தும் ரத்தன் டாடாவின் விளக்கமும் !

jagadeesh

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் சமூகத்தொற்று பரவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து வருகிறது.  நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் தாராளமாக நிதியளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் ஆகியோர் நிதியளித்து வருகின்றனர். இதில் அதிகபட்சமாக டாடா நிறுவன குழுமம் ரூ.1500 கோடி நிதியளித்துள்ளது. டாடா நிறுவனத்தில் கொடை உள்ளத்தை நாட்டு மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இன்று ரத்தன் டாடா கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் "கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதர்களுக்கான உந்துதல் மற்றும் உறுதியான முயற்சிகள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 2ஆ ம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானுக்கு எதிர்காலம் இல்லை என கூறியிருந்தார்கள், ஆனால் அப்படி நிகழவில்லை. அதுபோல கொரோனாவை வீழ்த்தி இந்தியப் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலையை அடையும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரத்தன் டாடா புகைப்படத்துடன் அந்த வாசகங்கள் இடம்பெற்றிருந்ததால், சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் அது தன்னுடைய பதிவல்ல என ரத்தன் டாடா மறுத்துள்ளார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தப் பதிவு என்னால் சொல்லப்படவோ எழுதப்படவோ இல்லை. சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் வரும் விஷயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய அதிகாரபூர்வ சேனல்களில் சொல்வேன். நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்