“ரசகுல்லா” அறிமுகம் செய்யப்பட்டு 150ஆவது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அதனை கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை
வெளியிடப்பட்டுள்ளது.
“பெங்காலி ஸ்வீட்ஸ்” என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது ரசகுல்லாதான். மேற்கு வங்கத்தின் பாரம்பரிய இனிப்பு வகையான ரசகுல்லா எங்கு தோன்றியது என்பது குறித்து கடந்த ஆண்டு சர்ச்சை உருவானது. அதில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா என இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடி வந்தது. பின் கொல்கத்தாவில் பாக்பசாரில் உள்ள நோபின் சந்திரதாஸ் என்பவரின் குடும்பத்தினர் ரசகுல்லா தயாரித்து வந்ததாக மேற்கு வங்காள அரசு நிரூபனம் செய்தது. இதைத் தொடர்ந்து நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு புவிசார் குறியீடு மேற்கு வங்கத்திற்கு வழங்கப்பட்டது.
கொல்கத்தாவைச் சேர்ந்த நோபின் சந்திரதாஸ் என்பவர் கடந்த 1868 ஆம் ஆண்டு உலகுக்கு அறிமுகம் செய்த ரசகுல்லா தற்போது நாடு முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு இனிப்பு வகையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. பக்பசாரில் நடந்த ரசகுல்லா திருவிழாவில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் விதம், விதமான ரச குல்லாக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சியில் மாநில மந்திரி பிர்ஹத் ஹக்கிம், நோபின் சந்திரதாசின் பேரன் திமான் தாஸ், கொல்கத்தா தபால் நிலைய அதிகாரி சாருகேஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.